புத்தகத்தின் பெயர்: தி ஃபோர் டிசிப்ளின்ஸ் ஆஃப் எக்ஸிக்யூஷன்: மேக் யுவர் வில்ட்லி இம்பார்டன்ட் கோல்ஸ் கேப்பன்
(The 4 Disciplines of Execution : Make Your Wildly Important Goals Happen)
ஆசிரியர்கள்: ஜிம் ஹலிங், ஸீன் கோவே, கிறிஸ் மெக்கஸ்னி (Jim Huling. Sean Covey, Chris Mcchesney)
பதிப்பகம்: Simon & Schuster
இலக்குகளை எட்டிப் பிடிக்க 4Dx ரூல்ஸ்!
சூப்பராய்ச் செயல்படும் பல நிறுவனங்கள் நாளடைவில் காணாமல் போய்விடுகின்றன. நன்றாகத்தான் செயல்பட்டது. ஆனால், போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் சுருண்டுவிட்டது என்று சொல்கிறோம். நன்றாகச் செயல்பட்ட நிறுவனத்தால் ஏன் எதிர்காலத்தில் வந்த போட்டியை எதிர்கொண்டு வெற்றிபெற முடியவில்லை என்று பார்த்தால் பெரும்பாலும் எதிர்காலத்துக்கான திட்டங்கள் சரிவரச் செயலாக்கப்பட்டிருக்காது என்பதை நாம் கண்டறிய முடியும். இதைவிடக் கொடுமையான ஒன்றையும் நாம் காணுவோம். எதிர்காலத்துக்காக சூப்பரான திட்டங்களை அந்த நிறுவனத்தினர் அவ்வப்போது போட்டிருப்பார்கள். இவ்வளவு திட்டம் போட்ட அவர்கள் ஒன்றைக்கூடச் செயல்படுத்தவில்லையே என்று தோன்றுமளவுக்கு நிகழ்வுகள் இருக்கும்.
குடும்பமோ, நிறுவனமோ, நிர்வாகமோ, தொழிற்சாலையோ உடனிருக்கும் பலரையும் நீங்கள் நிர்வகிக்கும்போது அவர்களிடம் இருந்து எதிர்காலத் திட்டங்களுக்குத் தேவையான உளமார்ந்த ஈடுபாட்டைப் பெறுவது மிகக் கடினமான ஒன்றாகும். மனிதன் அன்றாட வேலையைப் பார்த்து முடிப்பதே கடினமாக இருக்கிறது. இதில் எதிர்காலத்துக்காகத் திட்டம் போடுகிறார்களாம். அதைச் செயலாக்குகிறார்களாம் என்ற சலிப்பான நினைப்பு மனதில் தோன்றுவதனாலேயே நம்முடன் இருப்பவர்களின் உளமார்ந்த அர்ப்பணிப்புடன்கூடிய ஈடுபாட்டை இந்த விஷயத்தில் பெறுவது மிகக் கடினமாகிறது. பெரும்பாலான நிறுவனங்களில் பணியாளர்கள் எதிர்காலம் குறித்த இந்த விஷயத்தில் ஈடுபாடு காண்பிக்க மறுக்கிறார்களே என்று கடிந்துகொள்வதற்கும் கஷ்டமாகவே இருக்கும். ஏனென்றால், அன்றாட விஷயங்களைச் சரியாகவும், திறம்படவும் நடத்தி முடிப்பதே பணியாளர்களுக்கு அனுதினமும் புதியதாய் ஒரு சுனாமியைச் சந்தித்ததைப் போன்றதாய் இருக்கும். இதுதான் இன்றைய நிறுவனத் தலைமையின் முன்னிருக்கும் முழுமையான சவாலே.
நாளைக்கான வியூகங்கள் பற்றிச் சிந்தித்தல் மற்றும் நாளைக்கான திட்டமிடல் என்ற இரண்டும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் மிகமிக முக்கியமான ஒன்று என நம் அனைவருக்குமே தெரியும். அதை உணர்ந்தே நாம் அவ்வப்போது அடுத்த மாதம், அடுத்த வருடம், அடுத்த ஐந்து வருடத்தில் என்பது போன்ற திட்டங்களையெல்லாம் தீட்டி இதற்கான செயல்பாட்டை இந்திந்த தேதிகளில் முடிக்க வேண்டும் என்று வாரம்/நாள்/தேதி உள்ளிட்ட இலக்குகளையெல்லாம் தெளிவாகக் குறிக்கத் தவறுவதேயில்லை. ஆனாலும், இன்றைய வேகமான வியாபாரச் சூழலில் பல நிறுவனங்களிலும் நிகழ்காலத்தைக் கவனிப்பதிலேயே பல நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் கவனமும் ஆற்றலும் முழுவதுமாகச் செலவழிக்கப்படுகிறது. ஏனென்றால், அன்றாடச் செயல்பாடுகளில் சுனாமி போன்ற பிரச்னைகள் அடிக்கடி வந்துகொண்டல்லவா இருக்கிறது. இந்த நிகழ்காலச் சுனாமிகளை எதிர்கொள்வதிலேயே நிர்வாகிகளின் நேரம் அதிகமாகச் செலவிடப்படுவதாலேயே எதிர்காலத்துக்காகப் போட்ட திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட செயல்திட்டத்தின் இலக்குகள் பலவும் குற்ற உணர்ச்சியோ/குறுகுறுப்போ எதுவுமே இல்லாமல் மறக்கப்படுகிறது. என்ன செய்வது அன்றாடம் தொழிலை சிக்கல் இல்லாமல் நடத்தி முடிப்பதே பெரிய காரியமாய் இருக்கிறதே என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லி தேற்றியும்கொள்ள ஆரம்பித்துவிடுவோம். பலமுறை நிறுவனத்தின் நிர்வாகமுமே இதனை மறைமுகமாகவும்/அமைதியாகவும் ஒத்துக்கொண்டு எதிர்காலத் திட்டத்துக்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்குத் தேதிகளில் செயல்பாடுகளைக் கண்டிப்புடன் சரிபார்க்காமல் விட்டுவிடும். எதிர்காலம் குறித்து இப்படி விட்டுவிடுவது யாருக்கும் நல்லதில்லை. சரி அனைவரும் இப்படி வெறுமனே நிகழ்காலத்தை மட்டுமே கவனித்தால் யார் எதிர்காலத்துக்கான செயல்களுக்கு வித்திடுவது. இந்தக் குழு (டீம்) நிகழ்காலத்தையும், அந்தக் குழு (டீம்) எதிர்காலத்தையும் மனதில் வைத்துச் செயல்படும் என்று இரண்டு குழுக்களை வைத்துக்கொண்டு செயல்படுவது என்பது செலவு ரீதியாகவும், நிறுவனங்களின் தொழில்நுட்ப செயல்பாடு ரீதியாகவும் சாத்தியமே இல்லை. அப்படியென்றால் என்னதான் செய்வது? இதைக் கேட்டவுடன் எதிர்காலத்துக்குத் திட்டம் தீட்டுவதும் அதைச் செயல்படுத்துவதும் அவ்வளவு கஷ்டமா என்ன என்று நாம் அனைவருமே திகைக்கிறோம் இல்லையா? இந்த விஷயத்தில் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வதுதான் ‘தி ஃபோர் டிசிப்ளின்ஸ் ஆஃப் எக்ஸிக்யூஷன்(4டிஎக்ஸ்)’ எனும் புத்தகம். இந்தப் புத்தகம் 4டிஎக்ஸ் என்றால் என்ன; அதை எப்படி உங்களுடைய டீமில் அறிமுகப்படுத்திச் செயலாக்குவது; ஒட்டுமொத்த நிறுவனத்திலும் அதை எப்படிச் செயலாக்குவது என்ற மூன்று பெரும் உட்பிரிவாக எழுதப்பட்டுள்ளது.
மேலே சொன்ன பிரச்னைகளுக்கு எல்லாம் இந்தப் புத்தகம் சொல்லும் நான்குவித செயல்முறை ஒழுங்காற்றல்கள் (4டிஎக்ஸ் & டிசிப்ளின்ஸ்) முழுமையான தீர்வு அளிக்கும் என்கிறார்கள் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்கள். இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சுலபமான, மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடைமுறைபடுத்தக்கூடிய, வெற்றிகளைத் தொடர்ந்து பெறமுடியும் என நிரூபித்துக்காட்டக்கூடிய வழிமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நிறுவனத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் நிகழ்காலச் சுனாமியில் நீச்சலடித்துகொண்டே எதிர்காலத்துக்கான திட்டங்களையும் கச்சிதமாகத் திட்டமிட்டபடி செயல்படுத்த முடியும் என்று சொல்கிறார்கள் ஆசிரியர்கள். முழுக்கவனத்தையும் அதிமுக்கிய விஷயங்களில் வைப்பதன் மூலமும், முதன்மை திட்டங்களைக் கண்டறிந்து அவற்றைச் செயலாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், என்ன எதிர்பார்த்தோம் என்ன நடந்தது என்பதைச் சுலபத்தில் கண்டுகொள்வதற்கு ஏதுவான ஸ்கோர்போர்டுகளை நிறுவி அதனைத் தொடர்ந்து கவனித்துவருவதன் மூலமும், எதிர்காலம் குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அது செயலாக்கப்படுவதின் அவசியம் குறித்த பொறுப்புதனை நிறுவனத்தின் தலைமுறை வால் வரை பணியிலிருக்க்கும் அனைவரும் உணரும் வகையில் இழைந்தோட செய்வதன் மூலமும் மட்டுமே நிறுவனத்தின் நிர்வாகிகள் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியும் என்கின்றார்கள் ஆசிரியர்கள். நிறுவனமோ, தனி நபரோ இந்த நான்கு வழிவகைகளைத் தங்கள் செயல்பாட்டில் நடைமுறைக்குக் கொண்டுவந்தால் போட்டிகள் நிறைந்த இன்றைய சூழலில் எதிர்கால வெற்றி என்பதை உறுதிசெய்துகொள்ள முடியும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்த நான்கு டிசிப்ளின்கள் அன்றாடச் சுனாமிகளுக்குத் தீர்வு எதையும் சொல்லாது. அதேசமயம், இந்தச் சுனாமிக்கு நடுவேயும் எதிர்காலத்துக்கான வியூகங்களைச் செயல்படுத்துவதற்கு வழிவகைச் செய்யும் என்று உறுதிசொல்கின்றனர் ஆசிரியர்கள்.
செயல்முறை ஒழுங்கு (டிசிப்ளின்)
1 : உங்களுடைய வியூகத்தின் அதிமுக்கிய விஷயத்தின் இலக்குகளின் மீது [வைல்ட்லி இம்பார்ட்டன்ட் கோல்ஸ்(டபிள்யூஐஜி எனும் விக்)] அதீத கவனம் செலுத்துங்கள்!
எதிர்காலத்துக்கான பல திட்டங்களும் அதற்கான செயல்களும் செய்ய வேண்டியிருந்தாலும் அவை அத்தனையிலும் கவனம் வைக்காமல் அவற்றில் எது மிகமிக முக்கியமோ, எது நம்மை நம்முடைய வீயூகத்தையும் இலக்கையும் [விக்] நிறைவேற்ற மிக உதவுமோ அதில் மட்டுமே நம்முடைய முழுக் கவனத்தையும் வைக்கவேண்டும். இதைச் சரிவரச் செய்யாமல்போனால் ஏனைய மூன்று டிசிப்ளின்களும் உதவாதுபோய்விடும் என்று எச்சரிக்கின்றனர் ஆசிரியர்கள். சரி, எப்படி அந்த மிகமிக முக்கியமான செயலை கண்டறிவது எப்படி என்று கேட்பீர்கள். இந்தக் கேள்வியை இப்படி நேரடியாகக் கேட்டால் அந்தச் செயலை கண்டறிய முடியாது. கொஞ்சம் மாறுபட்ட கேள்வியாக இதை மாற்றிக் கேட்கவேண்டும். நாம் தற்சமயம் பல விஷயங்களைச் செய்கிறோம். நம்முடைய எதிர்காலம் குறித்து நாம் தற்போது வகுக்கும் வியூகங்கள் வெற்றிபெற்றால், அது நாம் தற்போது செய்துவரும் விஷயங்களில் எதனைப் பெருமளவுக்கு மாற்றும் என்ற கேள்வியையும், அந்த மாற்றம் எந்த அளவுக்கு இருக்கும் என்று கேட்க வேண்டும். அந்த மாறுதல்களின் அளவினைக் கண்டுகொண்டுவிட்டால் நம்முடன் இருந்து செயலாற்றும் நபர்களிடம் அந்த மாற்றத்துக்குத் தேவையான மாறுதல்களை எப்படிக் கொண்டுவருவது என்று நம்மால் சுலபமாகக் கண்டறிய முடியும் என்கின்றார்கள் ஆசிரியர்கள். இந்தவகைக் கவனத்தைப் பெறுவதற்கு நான்கு விதிகளை ஆசிரியர்கள் சொல்கின்றனர்.
முதலாவதாக, நம்முடன் இருக்கும் எந்த ஒரு குழுவும் இரண்டுக்கும் மேற்பட்ட அதிமுக்கிய விஷயங்களின் (விக்) மீது ஒரே நேரத்தில் கவனம் வைக்கக் கூடாது. அதாவது, எந்த ஒரு நிர்வாகியின் (லீடர்) மீதோ, குழுவின் மீதோ, குழுவின் உறுப்பினரின் மீதோ பழுவை திணிக்கும் வகையில் நாம் நடந்துகொள்ளக் கூடாது.
இரண்டாவதாக, ஒவ்வொரு மட்டத்திலும் கவனம் செலுத்தப்படும் அதிமுக்கிய விஷயங்கள் அடுத்த மட்டத்தில் இருப்பவர்களுக்குப் பலவிதத்திலும் உதவும் வண்ணம் இருக்க வேண்டும். சுருங்கச் சொன்னால் ஒவ்வொரு குழுவும் கவனம் வைக்கும் விஷயங்களும் மொத்தமாகச் சேர்த்தால் நிறுவனத்தை அதன் எதிர்கால வியூகத்தை நோக்கி சுலபத்தில் நகர்த்தும் வண்ணம் இருக்க வேண்டும். படைகள் போடும் ஒவ்வொரு சண்டையும் யுத்தத்தில் வெல்ல உதவுவதாய் இருக்க வேண்டும் என்பார்கள் இதை ஆங்கிலத்தில். ஒரு ஆர்க்கெஸ்ட்ராவில் எல்லோரும் சரியான நோட்ஸை வைத்து வாசித்தால் மட்டுமே சரியான இசை கிடைக்கும் இல்லையா அதைப் போன்றதுதான் இது.
மூன்றாவதாக ஆசிரியர்கள் சொல்வது, உயர்மட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அவர்கள் கவனம் செலுத்தவேண்டிய அதிமுக்கிய விஷயத்தை முடிவுசெய்து கொள்ளலாம் என்றும்; அதேசமயம் அவர்களுக்குக் கீழே இருக்கும் நிர்வாகிகள் தாமாகவே அவர்கள் கவனம் செலுத்தவேண்டிய அதிமுக்கிய விஷயத்தை முடிவுசெய்துகொள்ள முழு அனுமதி தரவேண்டும் என்பதைத்தான். குறிப்பாகச் சொன்னால், உயர்மட்ட நிர்வாகிகள், தங்களுக்குக் கீழே இருக்கும் லீடர்கள்/நிர்வாகிகள் ஒரு விஷயத்தை அதீத கவனம் செலுத்தவேண்டியதாக நான் (நாங்கள்) கருதுகிறேன் என்று கண்டறிந்து சொல்லும்போது, அது சரியில்லை என்று நினைத்தால் இது வேண்டாம் இதைவிடச் சிறப்பான வேறொன்றைத் தேர்ந்தெடுங்கள் என்று சொல்லலாமே தவிர; இதுதான் நீங்கள் கவனம் செலுத்தவேண்டிய அதிமுக்கியமான விஷயம் என்று ஒரு செயலில் கவனம் வைக்கச்சொல்லி (திணித்தல்) ஒருபோதும் சொல்லக்கூடாது!
நான்காவதாக, எல்லா நிலைகளில் இருப்பவர்களுடைய கவனம் வைக்க வேண்டிய அதிமுக்கிய விஷயங்களும் (விக்) அதன் விளைபயன் (ரிசல்ட்) குறித்தும் எந்தத் தேதியில் அந்த இலக்கை அடைய வேண்டும் என்பது குறித்தும் துல்லியமாக அளவீடு செய்ய முடிந்ததாய் இருக்க வேண்டும். அதாவது, இன்ன தேதியில் இந்த நிலைக்குச் சென்றதா என்று பார்க்கும் அளவுக்குத் துல்லியமாகக் கவனம் வைக்கவேண்டிய அதிமுக்கிய விஷயங்கள் ஆரம்பத்திலேயே தீர்மானிக்கப்பட வேண்டும்.
செயல்முறை ஒழுங்கு (டிசிப்ளின்) 2: தொய்வு வருவதற்கு முன்னரே சரிசெய்தல்!
எதிர்காலத் திட்டங்கள் குறித்த செயல்பாட்டில் நீங்கள் வெற்றிபெற்றீர்களா இல்லையா என்று சொல்லும் விஷயங்கள், செயல்பாடுகள் முடிந்த பின்னால் அடைந்த வெற்றிக்குப் பின்னால் தெரியும் மற்றும் வெற்றியினால் விளையும் விஷயங்களேயாகும். இதைப் பார்த்தால் நாம் வெற்றி பெற்றோமா அல்லது தோல்வியுற்றோமா என்பது தெரியும். நாம் இப்படிப்பட்ட விஷயத்துக்காகப் பாடுபடுகிறோம். வருமுன் தெரிந்துகொண்டு செயல்படுவதுதானே அழகு. உங்கள் வாகனம் சாலையில் எத்தனை முறை பழுதாகி நிற்கிறது என்பது சரியான நேரத்தில் சர்வீஸுக்கு விடாததால் வருவது என்ற பிரச்னைக்குப் பின்னால் தெரிவது. அதேசமயம், சரியாகக் குறிப்பிட்ட கிலோமீட்டர் இடைவெளியில் சரியாக சர்வீஸுக்கு விட்டுவிட்டால் சாலையில் வாகனம் நின்றுபோவதைத் தடுக்க முடியும் இல்லையா. இதுதான் வருவதற்கு முன்னரே சரி செய்தலுக்கான உதாரணம். வாகனத்தில் பழுது வருமுன் காப்பதற்கு அதன் ஓடோ மீட்டரில் எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது என்று நாம் எப்படித் தொடர்ந்து பார்த்துக்கொண்டேயிருக்க வேண்டுமோ, அதேபோல்தான் நம்முடைய அதிமுக்கிய கவன (விக்) விஷயத்திலும். முதலில் வாகனத்தில் ஓடோ மீட்டர் இருக்க வேண்டும். இரண்டாவதாக அது சரியாகச் செயல்பட வேண்டும். வாகன விஷயத்தில் முதலாவது என்பது கிட்டத்தட்ட நிச்சயமான விஷயம். ஏனென்றால், வாகன உற்பத்தியாளர் ஓடோ மீட்டரை நிச்சயம் பொருத்தித்தான் தருவார். நம்முடைய வேலை ஓடோ மீட்டர் ஓடுகிறதா என்பதையும், அது எத்தனை கிலோ மீட்டர் ஓடியிருக்கிறது என்பதையும் பார்த்து சரியான நேரத்தில் பழுது வருமுன்னர் காக்க சர்வீஸுக்கு விடவேண்டியிருக்கும். நம்முடைய எதிர்காலம் குறித்த வியூகங்களில் இருக்கும் அதிமுக்கிய கவனம் செலுத்த வேண்டிய விஷயங்களில் ஓடோ மீட்டரை நாம்தான் டிசைன் செய்து நிறுவி அதைப் பார்த்துக்கொண்டேயும் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். ஓடோ மீட்டரைப் போன்ற கண்காணிப்பு விஷயங்கள் இல்லாவிட்டால் நம்முடைய வண்டி (வீயூக வண்டி) நின்ற பிறகே நாம் நடவடிக்கைகளில் இறங்க ஆரம்பிப்போம். இது மிகவும் தவறாகிப்போகும். வருமுன் அறிந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே எதிர்காலத்தில் நாம் சென்றடைய வேண்டிய இடத்தைச் சென்றடைய முடியும்.
செயல்முறை ஒழுங்கு (டிசிப்ளின்) 3: ஸ்கோர் போர்டு ஒன்றை நிறுவுங்கள்!
ஸ்கோர் போர்டு இருப்பதாலேயே கிரிக்கெட்டில் பரபரப்பு இருக்கிறது. ஐம்பது ஓவர்கள் இரண்டு டீமும் ஆடி முடித்த பின்னரே ஸ்கோரர் ஸ்கோரைச் சொல்வார் என்றால், கிரிக்கெட்டில் பரபரப்பு இருக்காது. நாம் பாட்டுக்கு ஆடுவோம். இறுதியாய் யார் வெற்றிபெற்றார் என்பது அவரவர் தலையெழுத்து என்பதைப்போல் ஆகிவிடும். குழுவினரின் ஈடுபாடு குறைந்து என்னவோ போங்கப்பா! என்ற மனநிலை வந்துவிடும். எப்படி கிரிக்கெட்டில் ஐம்பது ஓவர் என்று ஆரம்பித்து, ஒரு டீம் விளையாடி முடித்து ஓர் இலக்கை நிர்ணயித்து இறுதியில் இத்தனை பால், இத்தனை ரன் என்ற கணக்கில் பரபரப்பாக ரன் குவிக்கும் மனநிலையில் விளையாட்டு வீரர்கள் விளையாடுகிறார்களோ, அந்த ஈடுபாடு நிறுவனத்திலும் வரவேண்டும் என்றால், எல்லோருக்கும் தெரியும் வகையில் ஸ்கோர் போர்டு என்பது கட்டாயம் வைக்கப்பட வேண்டும். வியூக நடவடிக்கையிலும். எதிர்காலம் குறித்த நடவடிக்கைகளில் அந்தந்தக் குழுவின் ஸ்கோர் என்ன/உறுப்பினர்களின் ஸ்கோர் என்ன என்பதைக் குழுவின் உறுப்பினர்களும் மற்றவர்களும் தொடர்ந்து தெரிந்துகொள்ளும் வண்ணம் ஸ்கோர் போர்டுகள் அமைக்கப்பட்டால், நிறுவனத்தில் எதிர்கால வியூகம் செயல்படுத்தப்படுவது குறித்த ஒரு பரபரப்பு தானாகவே தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் தன்னுடைய ஸ்கோர் எந்த நிலையில் இருக்கிறது என்பது தெரிந்தால் மட்டுமே பொறுப்பான நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பிப்பார்கள். ஸ்கோர் போர்டு மட்டுமே அவர்கள் எங்கே இருக்கிறார்கள். எங்கே இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தும். அதுவே அவர்களுடைய மனநிலையை மாற்றியமைத்து ஈடுபாட்டையும், செயல்பாட்டையும் உருவாக்கும். இந்த ஸ்கோர் விவரமே முடிவுகளை மாற்றவும் வேகப்படுத்தவும் உதவுவதாய் இருக்கும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
ஒவ்வொரு குழுவும் நாம் வைத்துக்கொண்டுள்ள ஸ்கோர் போர்டு சிறந்ததா என்று தெரிந்துகொள்ள நான்கு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
1. ஸ்கோர் போர்டு சுலபமானதாக இருக்கிறதா? குழுவினர்கள் சுலபத்தில் நம் குழுவின் நிலை என்ன என்பதனைப் புரிந்துகொண்டு துரிதமாக நடவடிக்கைகளை மாற்றியமைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்.
2. சுலபத்தில் ஸ்கோர் போர்டை பார்க்க முடிகிறதா? சூப்பாரான ஸ்கோர் போர்டை டிசைன் செய்த பின்னருமே அதைக் குழுவின் அனைவரின் கண்ணில் படுமளவுக்கு வைக்காமல் போனால் அதை எப்படி அவர்கள் பார்த்து செயலாற்ற முடியும். ஸ்கோர் போர்டு ஒவ்வொருடைய மனதையும் மாற்ற வல்லது என்பதால் அனைவருக்கும் தெரியும் வகையில் இருக்க வேண்டும்.
3. நடந்ததையும், நடத்த வேண்டியதையும் காட்டும்வகையில் இருக்கிறதா? இதுவரை எந்த நிலையை நாம் அடைந்திருக்கின்றோம் என்பதையும் குழுவினர்கள் தெரிந்துகொள்ளும் வசதியை ஸ்கோர் போர்டு கொண்டிருக்க வேண்டும். இனி என்ன செய்தால் நாம் எண்ணிய இலக்கை (டார்கெட்) அடைய முடியும் என்ற விவரத்தையும் அந்த ஸ்கோர் போர்டு சொல்ல வேண்டும். இதுவரை இத்தனை ரன். இன்னமும் இத்தனை ஓவர்/பால் இருக்கிறது. ஒரு ஓவருக்கு/பாலுக்கு இத்தனை ரன் தேவை என்பதைக் காட்டும் கிரிக்கெட் ஸ்கோர் போர்டைப்போல.
4. ஸ்கோர் போர்டை எவ்வளவு நேரம் உற்றுப்பார்த்தால் நாம் தோற்றுக்கொண்டு இருக்கிறோமா? ஜெயித்துக்கொண்டு இருக்கிறோமா என்பது தெரியவரும்? மிகமிகக் குறைந்த நேரமே ஸ்கோர் போர்டை பார்த்தாலே நம்முடைய நிலை சுலபத்தில் புரியும்வண்ணம் அந்த ஸ்கோர் போர்டு இருக்க வேண்டும்.
உளமார்ந்த ஈடுபாடே வெற்றியைத்தரும் என்பது உண்மை என்றபோதிலும், எங்கேயிருக்கிறோம் என்பதைத் தெளிவாய் அறிவிக்கும் ஸ்கோர் போர்டே போட்டி மனப்பான்மையைக் கொண்டுவந்து அந்த உளமார்ந்த ஈடுபாட்டுக்கு வழிவகைச் செய்யும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். நாம் ஜெயித்துக் கொண்டிருக்கிறோம் என்ற தகவலே குழுவினருக்கு புத்துணர்ச்சியை அளிக்கும் டானிக்காய் இருக்கிறது. மேல்மட்ட நிர்வாகத்துக்கும் இதில் ஒரு வசதி இருக்கிறது. ஜெயித்துக்கொண்டிருக்கும் குழுவுக்கு உற்சாகம் என்பது வெளியிலிருந்து தரப்படவேண்டியதில்லை. தோல்வியில் இருக்கும் குழுவுக்கு மேல்மட்ட நிர்வாகம் சரியான வழிகாட்டுதல்களைச் செய்தாலே போதுமானது.
செயல்முறை ஒழுங்கு (டிசிப்ளின்) 4: மேலே சொன்ன மூன்று டிசிப்ளின்களும் ஓர் ஆடுகளத்தை அமைக்க உதவியதேயாகும். நான்காவதாக ஆசிரியர்கள் சொல்வது ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை ஒப்படைப்பது (அக்கவுன்டபிலிட்டி) என்பதை. ஒவ்வொரு குழுவுக்கும், குழு உறுப்பினருக்கும் பொறுப்பு ஒன்றை ஒப்படைத்தாலேயன்றி வெற்றிப்பாதையை நோக்கி வியூகங்கள் நகராது. ஒவ்வொரு குழுவும் வாரம் ஒருமுறை இருபது முதல் முப்பது நிமிட நேரம் சந்தித்து [விக் மீட்டிங்] எதிர்காலம் குறித்த வியூகங்களில் அதிமுக்கிய கவனம் செலுத்தவேண்டிய விஷயத்தில் சொன்னதைச் செய்தோமா/செய்கிறோமா என்றெல்லாம் அலச வேண்டும். அதுகுறித்த செயல்பாட்டில் இருக்கும் குறை நிறைகளை ஆராய வேண்டும். குறைகள் இருந்தால் அதைக் களைய என்ன செய்யப்போகிறார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தவகைக் கூட்டங்கள் மிகமிக முக்கியமானது என்று சொல்லும் ஆசிரியர்கள், இந்தவகைக் கூட்டங்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் விளக்கமாகச் சொல்லியுள்ளனர்.
1. சென்ற வார விக் மீட்டிங்கில் நான் இதைச் சொன்னேன். இதைச் செய்தேன். இன்ன நடந்தது என்று இந்த வாரம் சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு, நான் மூன்று வாடிக்கையாளர்களுடன் பேசிப்பார்க்கிறேன் என்று சென்ற வாரம் சொன்னேன். பேசினேன். பேசியதில் இது தெரியவந்தது என்று சொல்வதைச் சொல்லலாம்.
2. ஸ்கோர் போர்டை பரிசீலனை செய்தல்: ஸ்கோர் போர்டை ஆராய்ந்தால் வெற்றியையும் அதற்கான காரணங்களையும், தோல்விகளையும் அதற்கான காரணங்களையும் ஆராய்ந்தறிய முடியும். இன்றுவரை இதையெல்லாம் செய்ய நினைத்தோம் – செய்தும் விட்டோம். இப்படியே போனால் இதெல்லாம் நடக்காது போலிருக்கிறது என்பது போன்ற உருப்படியான தகவல் பரிமாற்றங்கள் இந்தவகைக் கூட்டங்களில் நடைபெற வேண்டும்.
3. திட்டமிடல்: அதிமுக்கிய கவனம் செலுத்தவேண்டிய இலக்குகள் [விக்] குறித்த விஷயங்களில் அடுத்து நான் என்ன செய்வேன் – எப்படிச் செய்வேன் என்று குழுவினர் திட்டமிட்டு சொல்வது. உதாரணத்துக்கு, நான் அந்த கஸ்டமரிடம் பேசி பிரச்னையை முடிக்கிறேன். அடுத்த மீட்டிங்கில் ரிசல்ட் சொல்கிறேன். நான் இதற்குப் பொறுப்பு என்று சொல்வதைப் போன்றது. இந்தவகைக் கூட்டங்கள் குழுவினரை ஒரே திசையில் சிந்திக்க மற்றும் செயல்பட வைக்க உதவுவதாய் இருக்கும். ஸ்கோர் போர்டில் முன்னேற்றம் காட்ட நான் எந்த இரண்டு முக்கிய விஷயங்களைச் செய்தேன் என்று ஒவ்வொருவரும் இந்தக் கூட்டத்தில் சொல்ல வேண்டும். இது எதிர்பார்த்ததைப்போல் நடக்காதுபோல் இருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்காக நான் இதைச் செய்யத் திட்டமிடுகிறேன் என்பதையும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயத்தை இந்தவகைக் குழுவினரின் கூட்டங்கள் உருவாக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். இதுவும் தவிர, நான் மற்றவர்களுக்கு ஏதாவது உதவிகரமாய் இருக்கும் அளவுக்குச் செய்யவேண்டிய காரியங்கள் இருக்கிறதா என்று கேட்டு அறிந்துகொள்ளவும் இந்தவகைக் குழுவின் கூட்டங்கள் உதவும் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தக் கூட்டங்களில் பெறப்படும் வாக்குறுதிகள் (கமிட்மென்ட்) இரண்டு விஷயங்களைக் கொண்டிருக்க வேண்டும். முதலாவதாக, ஒருவர் நான் இதை அடுத்த வார மீட்டிங்குக்குள் முடித்துக்கொடுப்பேன் என்று உறுதி சொல்வது. இரண்டாவதாக, நான் இதைச் செய்வேன் என்று அவர் சொல்லும் செயல், குழுவின் வியூகத்தை (விக்) முன்னோக்கிச் செல்ல பெருமளவில் உதவுவதாய் இருப்பது என்று சொலின்றனர் ஆசிரியர்கள்.
இதுவும் தவிர, நாம் புரிந்துகொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் குழுவின் கூட்டத்தில் ஒவ்வொருவரும் கொடுக்கும் வாக்குறுதிகள் கம்பெனிக்காகத் தரப்படுபவையல்ல. தனிமனிதன் என்ற அந்தஸ்தில் வழங்கப்படுபவையாகவே திகழ்கின்றன. மொத்தமாகக் குத்துமதிப்பாய் இதைச் செய்கின்றேன் என்ற வாக்குறுதியை நம்பியிராமல், அடுத்தவாரம் இதைச் செய்து காண்பிப்பேன் என்ற வாக்குறுதியைப் பெறுவதால் வேலை கனஜோராக நடக்க வாய்ப்புள்ளது என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தவகைக் குழுவினரின் கூட்டங்களில் சிலர் தொடர்ந்து சொல்வதை நிறைவேற்றும்போது ஓர் ஆரோக்கியமான போட்டி உருவாகி நாளடைவில் அனைவருமே சொல்வதைச் செய்ய முயல்வார்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். இந்தவகைக் கூட்டங்கள் குழுவின் அங்கத்தினர்களிடம் இருந்து புதிய ஐடியாக்களை வெளிக்கொணரவும், பரிசோதனை முயற்சிகளை ஊக்குவிக்கவும், குழுவின் அங்கத்தினர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் வகைச் செய்யும். இந்த 4டிஎக்ஸ் முறையில் அதிகாரத்தின் மூலம் எதிர்காலத்துக்கான வேலைகள் முடிக்கப்படுவதில்லை என்பதை நீங்கள் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரின் இயல்பான மற்றும் ஆர்வத்துடனான ஈடுபாட்டுடன் இந்தவகை வேலைகள் நிறைவேற்றப்படுகின்றன என்பதுதான் 4டிஎக்ஸின் சிறப்பே என்கிறனர் ஆசிரியர்கள்.
பாகம்:2
4டிஎக்ஸினை ஒரு நிறுவனத்தில் அறிமுகம் செய்யும்போது எவற்றையெல்லாம் எதிர்பார்க்கலாம்:
புத்தகத்தின் இரண்டாவது பாகத்தில் சொல்லப்பட்டிருப்பது எப்படி இந்த 4டிஎக்ஸினை நிறுவனத்தில் நடைமுறைப்படுத்துவது என்பதனை. ஏற்கெனவே சொன்னதைப் போல் 4டிஎக்ஸ் என்பது ஒரு சட்டதிட்டம் இல்லை. ஒரு செயல்முறை ஒழுங்காகும். இதனாலேயே இதனை நடைமுறைப்படுத்துவதற்குக் குழுவாரியாக மிகவும் நேர்த்தியான முயற்சி தேவைப்படுகிறது. ஒவ்வொரு குழுவும் கீழே சொல்லியுள்ள ஐந்து படி நிலைகளைக் கடந்து சென்றே 4டிஎக்ஸினை நடைமுறைப்படுத்துகிறது என்கின்றனர் ஆசிரியர்கள்.
படிநிலை1:முக்கிய இலக்குதனை நிர்ணயித்தல்(விக்): நம் குழுவுடைய அதிமுக்கிய கவனம் தேவைப்படும் இலக்கு மற்றும் விஷயம் [விக்] என்பது எது என்பதில் தெளிவு பெறுவது. எதில் கவனம் வைத்தால் பெரிய அளவில் மாற்றங்கள் வரும் / பலன்கள் கிடைக்கும் என்பதைக் கண்டறிவதுதான் மிகமிக முக்கியமான முதல் படிநிலையாகும். அதன் பின்னால் குழுவில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ஸ்கோர் போர்டுதனை கண்டறிந்து நிறுவ வேண்டும். வாராந்திர விக் மீட்டிங்குகளைத் திட்டமிட்டு அட்டவணை போட வேண்டும்.
படிநிலை 2:ஆரம்பித்தல்: 4டிஎக்ஸினை அறிமுகம் செய்து ஆரம்பித்து வைக்கும்போது ஒவ்வொரு குழுவின் தலைவரும் நிறையவே பிரயத்தனப் படவேண்டியிருக்கும் என்பதை அவர் முழுமையாக உணர்ந்து செயல்பட வேண்டும். 4டிஎக்ஸினை நடைமுறைப்படுத்துதல் என்றால் என்ன என்பதனை முழுமையாக உணர்ந்து அதீத முனைப்புடன் செயல்பட்டு நம்முடைய குழுவுக்குத் தேவையானது என்ன என்பதை பரிபூரணமாக உணர்ந்தும், அதனால் என்ன பலன் என்பதை அறிந்தும் எந்த விதமான எதிர்ப்புகளைத் தன்னுடைய குழுவினர் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதைக் கணக்கிட்டும் செயல்பட வேண்டியிருக்கும்.
படிநிலை 3: ஏற்றுக்கொண்டு செயல்படுதல்: சுலபத்தில் குறைந்த காலத்தில் 4டிஎக்ஸினை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். நாள்பட முயற்சித்தால் மட்டுமே 4டிஎக்ஸினை ஏற்றுக்கொள்ளல் என்பது சாத்தியமாகும். 4டிஎக்ஸினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தத் தேவைப்படும் முக்கிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போம். எடுத்த எடுப்பிலேயே 4டிஎக்ஸ் எதிர்பார்த்த பலன்களைத் தருகிறதா என்று பார்க்காமல் 4டிஎக்ஸ் என்ற நடைமுறை குழுவில் செவ்வனே ஏற்றுக்கொள்ளப்படுகிறதா என்றே பார்க்க வேண்டும். குழுவில் அனைவருக்கும் பொறுப்புகளைக் கொடுத்து, வாராந்திர விக் மீட்டிங்குகளை நடத்தி, ஸ்கோர்போர்டுகளை நிறுவி, தேவையான மாறுதல்களைச் செய்து, தேவைப்படும் இடங்களில் பயிற்சி மற்றும் ஆலோசனைகளை வழங்கி (மென்டாிங்), குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்களைச் சொல்லி, குழுவில் இருக்கும் எதிர்ப்பாளர்களும் நம்பும்வகையிலான பலன் குறித்த விளக்கங்களைச் சொல்லி 4டிஎக்ஸ் – நடைமுறைப்படுத்துதல் என்ற புதிய பாதையை நிறுவவேண்டியிருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
படிநிலை 4: மேம்படுத்துதல்: 4டிஎக்ஸினை அறிமுகப்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவரும் வேளையில் வியூகங்களை நோக்கி முன்னேற உதவும் வகையில் குழுவினர் தரும் புது யோசனைகள் அனைத்தையும் ஊக்குவிக்க வேண்டும். 4டிஎக்ஸினை செயல்படுத்துவதற்குக் குழுவினர் செய்யும் தொடர் விடாமுயற்சியையும், குழுவினர் பெற்ற வெற்றியையும் அவ்வப்போது கொண்டாடவும் மறந்துவிடக்கூடாது.
படிநிலை 5: பழக்கமாக மாற்றுதல்: ஒரு குழுவுக்கு 4டிஎக்ஸ் என்பது நடைமுறையில் பழக்கமாக மாறவேண்டுமென்றால் சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். ஓர் அதிமுக்கிய கவனம் தேவைப்படும் விஷயம் (விக்) நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் உடனடியாக அடுத்த விக்கைக் கண்டறிந்து அதனை நோக்கி செயல்படுவதற்கான நடைமுறைகளை (ஸ்கோர் போர்டு போன்றவற்றை) உடனுக்குடன் குழுவினர் மத்தியில் கொண்டுவந்துவிட வேண்டும். குழுவினரில் அனைவருமே சிறப்பாகச் செயல்படுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. எனவே, குழுவின் தலைவன், குழுவின் நடுவில் இருந்து சரியான ஊக்குவித்தலை தொடர்ந்து தந்துவருவதன் மூலமே 4டிஎக்ஸினை குழுவினர் பழக்கமாக மாற்றிக்கொள்ள உதவ முடியும்.
4டிஎக்ஸினை அறிமுகப்படுத்தும்போதும் சரி; நிர்வகிக்கும்போதும் சரி முக்கியமான ஒரு விஷயத்தை நிர்வாகிகள் மறந்துவிடக்கூடாது. நிர்ணயிக்கப்படும் இலக்குகள் அடையக்கூடியவையாக இருக்க வேண்டும் என்பதுதான் அது. நிறையக் குழுக்களின் தலைவர்கள் அடைய முடியாத இலக்குகளை நன்றாகத் தெரிந்தே நிர்ணயித்துவிட்டு மனதில், இதில் எழுபத்தைந்து சதவிகிதம் நடந்தாலே போதுமானது என்று நினைத்துகொண்டு செயல்பட ஆரம்பிப்பார்கள். இது மிகமிகத் தவறான ஒன்று. ஏனென்றால், விக் மீட்டிங்குகளில் குழுவினர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் எல்லாம் தனி நபர் வாக்குறுதிகள். நடக்கச் சாத்தியமில்லாத ஓர் இலக்கை நிர்ணயித்து அதற்கான தனிநபர் வாக்குறுதிகளைப் பெற்று பின்னால் அதனை அவர்கள் செயலாக்க முடியாமல்போய் அவமானப்பட்டார்கள் என்றால் 4டிஎக்ஸ் என்ற ப்ரேம் வொர்க்கே கெட்டுப்போய்விடும் என்பதைக் குழுத் தலைவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
4டிஎக்ஸை பொறுத்தவரை அதை அறிமுகப்படுத்தி நிறுவுவதில் காட்டப்படும் கருத்தும் திறமையுமே, அருமையான வெற்றிக்கு வழிவகுக்கும் எனலாம். அதற்கான வழிமுறைகளையும் இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளனர் ஆசிரியர்கள்.
நிறுவுவதில் முதல் நிலை: அதிமுக்கிய இலக்குகளைக் கண்டறிந்து முனைப்புடன் செயல்படுவது (விக்). 4டிஎக்ஸில் ஒரு குழு மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்றால் முதலில் அது ஒன்று அல்லது இரண்டு விக்குகளைக் கண்டறிந்து அதை நோக்கி செயல்பட ஆரம்பிக்க வேண்டும். எக்கச்சக்கமான விக்குகளைக் கொண்டிருந்தால் நாம் எதிர்கொள்ளும் அன்றாடச் சுனாமியில் அவை அனைத்துமே மறந்துபோகும். ஒன்றிரண்டு மட்டுமே இருந்தால் என்னதான் அன்றாடச் சுனாமிக்குள் நாம் இருந்தாலும் விக்குகளை நோக்கி செயல்பட வேண்டும் என்ற எண்ணம் குழுவினரிடம் இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
எப்படி விக்குகளைக் கண்டறிவது
முதலாவதாக, ஒவ்வொரு குழுவும் அவர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு செயல்பாடுகளிலும் இருக்கும் விக் வாய்ப்புகள் குறித்துச் சிந்திக்க வேண்டும். நிறுவனத்தில் இருக்கும் பல்வேறு குழுவினர்கள் கூடியும், ஒவ்வொரு குழுவில் இருக்கும் அனைவரும் சேர்ந்தும், குழுத் தலைவரும், ஒவ்வொரு குழு உறுப்பினரும் கூட்டாகவும்/தனியேயும் அமர்ந்து மூளையைக் கசக்கி யோசனை (ப்ரெய்ன் – ஸ்ட்ராமிங்) செய்யவேண்டும். விக்கைக் கண்டறிவதில் கவனத்தில் வைக்கவேண்டிய ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், விக்குகளை முடிவு செய்வதில் குழுவினர் ஒவ்வொருவரும் ஈடுபடுத்தப்படவில்லை என்றால் அவர்களிடம் இருந்து அதைச் செயலாக்குவதற்கு உளமார்ந்த ஈடுபாட்டைப்பெற முடியாது என்பதைத்தான். பல்வேறு விக்குகள் குறித்த கருத்துக்களைப் பல நபர்களிடம் இருந்து பெற்று வரிசைப்படுத்துதல்தான் முதல் நிலை.
இரண்டாவதாக, பெறப்பட்ட விக்குகள் குழுத் தலைவருக்குத் திருப்தியளிப்பதாக இருந்தால் (அதாவது, எதிர்கால வியூகங்களுக்கு மிகவும் ஏற்றவையாக விக்குகள் இருக்கும்பட்சத்தில்) அந்தவகை விக்குகளில் எவை ஒட்டுமொத்த நிறுவனத்தின் எதிர்கால வியூக எண்ணத்தைச் செயலாக்குவதற்கு எவையெல்லாம் உதவும் என்று பார்த்து, அவற்றையே குழுவின் விக்காகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால், சில விக்குகளைத் தேர்ந்தெடுத்து செயல்பட்டால் அந்தக் குழு சூப்பராய் அதில் செயல்பட்டு பெயரைத்தட்டிச் செல்லும்வகையில் இருக்கும். ஆனால், அந்த விக்குகள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த முன்னேற்ற வியூகங்களுக்கான நடவடிக்கைக்கு உதவுவதாய் இருக்கும். அப்படி உதவாது போனால் அதில் நேரம் செலவிடுவதாலும், அதனை நிறைவேற்றுவதாலும் எந்த உபயோகமும் இல்லையல்லவா? இதனாலேயே, இந்தவகைப் புதைகுழியில் குழுத் தலைவர்கள் சிக்கிவிடக்கூடாது என்கின்றனர் ஆசிரியர்கள்.
மூன்றாவதாக, இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட விக்குகளில் ஒவ்வொன்றையும் நான்கு முக்கியக் கோணங்களில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். நம்முடைய குழுவின் விக் மொத்த நிறுவனத்தின் விக்குடன் ஒத்துப்போவதாய் இருக்கிறதா? விக்கை நோக்கிய செயல்பாட்டையும் அதன் பலனையும் அளவீடு செய்யத் தெளிவான வழிவகை இருக்கிறதா? இந்த விக்கால் வரும் பலன்கள் யாரைச் சேரும். நம்முடைய டீமையா அல்லது வேறு ஒரு டீமையா? குறைந்தபட்சம் 80 சதவிகித பலன்களையாவது நம்முடைய டீம் இந்த விக்கினால் பெறுமா? இந்த விக்கை செயல்படுத்த யார் அதிகமாக இறங்கி வேலை செய்யவேண்டும். மொத்த டீமுமா? அல்லது தலைவர் மட்டுமா? என்ற கேள்வியையும் கேட்க வேண்டும். மொத்த டீமும் முயற்சி செய்யவேண்டும் என்றிருக்கும் விக்குகளே சிறந்தவை. தலைவர் மட்டுமே என்ற நிலை இருந்தால் அந்த விளையாட்டில் டீமின் ஈடுபாடு வெகுவிரைவில் குறைந்துவிடும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
நான்காவதாக, விக்கை வரையறுப்பது என்கின்றனர் ஆசிரியர்கள். மேலே சொன்னவகையில் பல்வேறு விக்குகளை உருவாக்கி சலித்து எடுத்தப் பின்னால் விக்குகளை வரையறை செய்யுங்கள். அப்படி வரையறை செய்யும்போது கீழ்க்கண்ட விஷயங்களை மனதில்கொள்ளுங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள். உங்கள் விக் என்பது ஒரு வினைச்சொல்லில் ஆரம்பிப்பதாய் இருக்கவேண்டும். செலவை குறைத்தல், புதிய பிளான்ட் போடுதல் போன்ற நேரடி செயல்பாட்டு வார்த்தைகளுடனேயே விக்குகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். அடுத்தபடியாக, வரையறுக்கப்பட்ட விக்குகளில் இன்ன தேதிகளில் இது நடக்காவிட்டால் என்ன செய்யவேண்டும். எப்போது செய்யவேண்டும் என்பதைத் தெளிவாகத் திட்டமிட்டு அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல் விக்குகள் மிகவும் எளிமையானதாக இருக்கவேண்டும். எக்கச்சக்கமான புரியாத விஷயங்களையும் வார்த்தைகளையும் கொண்டதாக அது இருக்கவே கூடாது. ஒரு விக் என்பது என்ன என்பதைச் சொல்லவேண்டுமே தவிர, அதை எப்படிச் சென்றடைவது என்பதைப் பற்றி விக்கில் எந்த ஒரு விஷயமும் சொல்லப்படக்கூடாது. எதை அடையவேண்டும் என்பதுதான் விக்கே தவிர, எப்படி அடையவேண்டும் என்பதைச் சொல்வது விக் அல்ல என்கின்றனர் ஆசிரியர்கள்.
நிறுவுவதில் இரண்டாம் நிலை: 4டிஎக்ஸினை நிறுவும்போது மிகவும் கடினமான ஒரு விஷயமாகக் கருதப்படுவது எதிர்பார்ப்பதை நடத்தி முடிக்க என்னென்ன விஷயங்கள் செய்யப்பட வேண்டும் அல்லது எதிர்பார்த்தபடி நடக்காமல் போயிவிடாமல் இருக்க எந்தெந்த விஷயத்தில் நம்முடைய கவனம் இருக்கவேண்டும் என்பதை நிர்ணயிப்பது என்பதாகும். நாம் ஏற்கெனவே பார்த்த வாகன சர்வீஸ் உதாரணத்தை நினைவில் கொள்ளுங்கள். வண்டி நிற்கக்கூடாது என்றால் குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓடியவுடனேயே சர்வீஸ் செய்யப்பட வேண்டும். இதில் எத்தனை கிலோமீட்டர் ஓடியவுடன் சர்வீஸ் செய்யப்பட வேண்டும் என்பதை நிர்ணயம் செய்வதுதான் கடினமே. மோட்டார் வாகனங்களில், தயாரிக்கும் நிறுவனம் அதைச் சொல்லிவிடுகிறது. ஆனால் நம்முடைய அன்றாடச் செயல்பாட்டில் நாமே அதைக் கண்டறிந்து செயல்பட வேண்டியுள்ளது. இதைச் செய்ய பின்வரும் விஷயங்களை நாம் கடைப்பிடிக்க வேண்டும். முதலாவதாக, விக்கை அடையாமல் தடுக்கக்கூடிய விஷயங்கள் எவை என்பதைக் கண்டறிய ப்ரெய்ன் – ஸ்ட்ராமிங் கூட்டங்களை நடத்த வேண்டும். அந்தக் கூட்டத்தில் இவையெல்லாம் தடையாக வர வாய்ப்புள்ளது என்று கண்டறிவோம். எக்கச்சக்க விஷயங்கள் நம்முடைய பட்டியலில் இருக்கும். இவை அனைத்திலும் நாம் கவனமாக இருக்கவேண்டும் என்று குழுவினரிடம் நாம் சொன்னால் கவனம் சிதறவே வாய்ப்பு அதிகம். அதனாலேயே பட்டியலிடப்பட்ட விஷயங்களில் மிகமிக முக்கியமான அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று அல்லது இரண்டு விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றில் கவனம் செலுத்துமாறு குழுவினருக்குச் சொல்ல வேண்டும்.
மூன்றாவதாக, எந்தவகை யோசனைகள் முன்னேற்றத்தின் பாதையில் நம்மைக் கொண்டு செல்கிறது என்பதை உணர்ந்து செயல்படுதலாகும். இந்த ஐடியாவில் போனால் இது நடக்கும் என்பதை முன்னரே யூகிக்க முடியுமா? முடியாதா என்று பார்க்க வேண்டும். அப்படி யூகிக்க முடியாத ஐடியாக்கள் எத்தனை நல்லவையாகத் தென்பட்டாலும் அதனை விட்டுவிட வேண்டும். அதேபோல், குழுவினருக்கு இந்த ஐடியாவைச் செயலாக்குவதில் எண்பது சதவிகித பிடிமானம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இல்லாத ஐடியாவை நாம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதுபோலவே, எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு ஐடியாவும் குழுவினருக்கு ஒரு நல்ல பழக்கமாக (ஹேபிட்) மாற வழிவகைக் கொண்டவையாக இருக்க வேண்டும். அப்படிப் பழக்கமாக (ஹேபிட்) மாற வழிவகைச் செய்யாத ஐடியாக்களைப் பின்தொடருவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் எடுத்துக்கொள்ளும் ஐடியாவில் மொத்த டீமும் விளையாட வேண்டுமா அல்லது லீடர் மட்டுமே விளையாடுவாரா என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். 4டிஎக்ஸ் என்பதே டீமின் விளையாட்டு. லீடர் மட்டும் விளையாடும் ஐடியாக்கள் தொடர்ந்து பலனை அளிக்காமல் போகும் வாய்ப்பு அதிகம். அதுமட்டுமல்லாமல், எடுத்துக்கொண்டுள்ள விக் நிஜமாகவே முக்கியமானது என்றால், அதனால் வரும் பலன்களையும் அதன் நடைமுறை வெற்றியையும் சுலபத்தில் கணக்கிட முடிவதாகவே இருக்கும். சரி. நடைமுறை, வெற்றி, அளவீடு என்றெல்லாம் பேசிக்கொண்டே போகிறோம். எதிர்பாராத விளைவுகள் ஏதும் உருவாகுமா என்று பார்க்க வேண்டாமா? நிச்சயமாய் அதையும் சேர்த்துதான் நாம் பார்த்தாக வேண்டும் என்கிறார்கள் ஆசிரியர்கள்.
நான்காவதாக, முன்னேற்ற குறியீடுகள் என்னென்னெ என்பதைத் தீர்மானிப்பது. பின்வரும் கேள்விகளே முன்னேற்றத்துக்கான குறியீடுகளைத் தீர்மானிக்கும்போது முக்கியமாகக் கேட்கப்பட வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். நாம் தனிநபரின் முன்னேற்றத்தைக் கணக்கிட போகிறோமா அல்லது குழுவின் முன்னேற்றத்தைக் கணக்கிடப்போகிறோமா? முன்னேற்றத்துக்கான குறியீடுகளைத் தினமும் கணக்கிடப்போகிறோமா அல்லது வாராந்திர ரீதியாகக் கணக்கிடப்போகிறோமா? தினசரி கணக்கீடு என்பது பொறுப்பை மிகவும் அதிகரிப்பதாய் அமையும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
நிறுவுவதில் மூன்றாம் நிலை: ஸ்கோர்போர்டின் அவசியத்தை முழுமையாக உணர்ந்து செயல்படுவதைக் குறிக்கிறது இந்த நிலை. 4டிஎக்ஸுக்கான ஸ்கோர் போர்டு ஒன்றை நாம் நிறுவும்போது எவ்வளவு தூரம் குழுவினரை நாம் நம்மோடு இணைத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு ஸ்கோர் செய்வதில் குழுவினரின் ஈடுபாடு இருக்கும் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். ஸ்கோர் போர்டு என்பது எந்த தீம்மைக் கொண்டதாய் இருக்க வேண்டும் என்று முதலில் முடிவெடுக்க வேண்டும். அந்த தீம் ஸ்கோர் போர்டை பார்த்தவுடனேயே ஒருவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பதைத் தெளிவுபடுத்துவதாய் இருக்க வேண்டும். ஸ்கோர் போர்டுகள் அவரவருடைய தனித்துவத்தை உணர்த்துவதாய் இருக்கும்பட்சத்தில் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் அதிக அளவில் இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். ஸ்கோர் போர்டை டிசைன் செய்யும்போது அது சுலபமானதாக இருக்கிறதா? மொத்த டீமும் அதைச் சுலபமாகப் பார்க்க முடியுமா? எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சரி செய்வதற்கான நடவடிக்கைகள் போன்றவற்றைத் தெளிவுபடுத்திக்காட்டும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளதா? என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சொன்னதைப்போல் டீம் அதனுடைய ஸ்கோர் போர்டை முழுமையாக வடிவமைப்பதற்கு உரிய சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். ஸ்கோர் போர்டை வடிவமைத்தால் மட்டும் போதாது. அதனைத் தொடர்ந்து அப்டேட் செய்துகொண்டேயும் இருப்பதில் கவனமாக இருக்கவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.
நிறுவுவதில் நான்காம் நிலை: பொறுப்பைக் கொடுத்து அனைவரிடத்தும் அதனை இழையோட செய்தல் நான்காவது நிலையாகும். இதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டியதாக இருக்கும் என்று சொல்லும் ஆசிரியர்கள், இதிலும் நிறைய புதைகுழிகள் இருக்கின்றன என்பதைக் கருத்தில்கொண்டு செயலாற்ற வேண்டும் என்கின்றனர். ஏனென்றால், இதிலும் அன்றாட நடவடிக்கை எனும் சுனாமி பொறுப்பை நீர்த்துப்போகச் செய்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விக் மீட்டிங்கில் உருப்படியாக எதுவும் சொல்லப்படாமல் சாஸ்திரத்துக்காக நடத்தப்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரே வாக்குறுதியை ஒருவர் இரண்டு வாரங்களுக்குமேல் சொல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இது என்னால் முடியவில்லை என்று ஒரு டீம் உறுப்பினர் சொல்லும்போது அதைக் கேட்டுக்கொண்டு அதற்கான காரணக் காரியங்களை ஆராய்ந்து, உதவும் மனநிலையைப் பெறவேண்டும். விக் மீட்டிங்குகளை வெற்றிகரமாக நடத்த பின்வரும் நான்கு விஷயங்களை மனதில் கொள்ளவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். குழுவில் ஒருவருக்கு உரிய மரியாதைக் கொடுப்பது என்பது மிக மிக முக்கியம். உதாரணத்துக்கு, ஒரு விக் மீட்டிங்கில், சார் போனவாரம் நீங்கள் கொடுத்த கமிட்மென்ட் எதையும் நீங்கள் முடிக்கவில்லை. சென்ற வாரம் உங்கள் டிபார்ட்மென்ட் நடத்திய ஈவென்ட் மிகப் பெரிய வெற்றி என்பது எனக்குப் புரிகிறது. உங்களுடைய பங்களிப்பு அதில் மிகமுக்கியமானதாக இருந்தது என்பதையும் முழுமையாக உணர்கிறேன் என்று சொல்வது. அதேசமயம், இந்த விக் டீமில் உங்கள் பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதையும் உணர்ந்து செயல்படுங்கள் என்று பொறுப்பைக் குறிப்பிடவும் தவறக்கூடாது என்கின்றனர் ஆசிரியர்கள். அன்றாடச் சுனாமி இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி எதிர்கால வியூகங்களை நாம் வகுத்துத்தானேயாக வேண்டியிருக்கிறது என்று பதமாகச் சொல்லவேண்டும். மேலும், அவருடைய பங்களிப்பை ஊக்குவிக்கும்விதமாக அடுத்தவாரம் நீங்கள் சென்ற வாரம் கொடுத்த வாக்குறுதியையும்; இந்த வாரம் கொடுக்கப்போகும் வாக்குறுதியையும் சேர்த்து முடித்துவிடுவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் என்று சொல்லவேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள். நான்காவது டிசிப்ளின் ஆகிய விக் மீட்டிங்தான் டீமை அது விளையாட்டில் இருக்கிறது என்பதை மீண்டும் மீண்டும் நினைவூட்டுவதாக இருக்கிறது. ஜெயிப்பதன் அவசியத்தைச் சொல்லும் இந்த விக் மீட்டிங்குகள், அவர்கள் ஜெயித்துவிட்டார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் உதவுவதாக இருக்கிறது. இந்த வெற்றிதான் 4டிஎக்ஸின் மூலம் நாம் பெற நினைப்பதே. அதனாலேயே வாராந்திர விக் மீட்டிங்குகள் அதிக அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள்.
பாகம்-3
4டிஎக்ஸினை நிறுவுவதில் கடைப்பிடிக்க வேண்டியவை!
புத்தகத்தின் மூன்றாவது பகுதியாக உங்கள் நிறுவனத்தில் 4டிஎக்ஸினை நிறுவுவதில் இருக்கும் சிறந்த நடைமுறைகளைச் சொல்கின்றனர் ஆசிரியர்கள். உங்கள் நிறுவனத்தில் 4டிஎக்ஸினை நிறுவ முயலும்போது உங்கள் நிறுவனத்தின் செயல்பாட்டுக் கலாசாரத்தை மனதில்வைத்துச் செயல்படுங்கள். ஏற்கெனவே வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கும் நிறுவனத்தில் 4டிஎக்ஸினை நிறுவுவது என்பது மிகவும் சிரமமான காரியமாக இருக்கும். ஏனென்றால், ஏற்கெனவே அவர்கள்தான் சிறப்பாகச் செயல்படுகிறார்களே! அதேபோல், மேல்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் கீழே இருக்கும்
தலைவர்களைப் பொறுப்பாக்குவதில் மிகவும் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். மேலும் 4டிஎக்ஸினை நிறுவுவதற்கான அத்தனை நிர்வாக மற்றும் ஏனைய வசதிகளும் உங்கள் நிறுவனத்தினுள் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். 4டிஎக்ஸினை நிறுவுவதன் மூலம் ஒரு நிறுவனத்தின் தலை முதல் வால் வரை செயல்படும் அனைவருமே நிறுவனத்தின் முன்னேற்றத்தில் நம்முடைய பங்கு என்ன என்பதை முற்றிலுமாக உணர்ந்திருப்பார்கள் என்று சொல்கின்றனர் ஆசிரியர்கள். ஒரு நிறுவனத்தில் முற்றிலுமாக 4டிஎக்ஸ் அறிமுகப்படுத்தப்படும்போது இது ஒருநாள் ஈவென்ட் அல்ல. ஒரு தொடர் பிராசஸ் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்கின்றனர். அதேபோல், 4டிஎக்ஸ் என்பது ஒரு சிறந்த டீம் வொர்க்காக மட்டுமே பார்க்கப்படவும், நிறுவப்படவும் வேண்டும். மேலும், 4டிஎக்ஸ் என்பது ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தலைவரைக்கொண்டே நிர்மாணிக்கப்பட வேண்டும்.
4டிஎக்ஸினை வெற்றிகரமாக நிறுவ ஆறு வழிகள்!
இறுதியாக ஆசிரியர்கள் 4டிஎக்ஸினை ஒரு நிறுவனத்தில் நிறுவுவதற்கு ஆறு வழிகளைச் சொல்லியுள்ளனர். முதலாவதாக, விக்கைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுதல் என்பது. இரண்டாவதாக, ஒவ்வொரு டீமுக்குமான விக்கை நிர்ணயித்து அதில் முன்னேற்றத்தை அளவிடும் குறியீடுகளை நிர்ணயம் செய்வது. மூன்றாவதாக, லீடர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 4டிஎக்ஸ் என்பதை எவ்வாறு நிறுவி நிர்ணயிப்பது என்று சொல்லித்தர வேண்டும். இது ஒருநாள் பயிற்சியில் நடைபெறக்கூடிய ஒன்றாகும். பயிற்சிபெற்ற லீடர்கள் டீமை உருவாக்கிச் செயல்பட வைக்கவேண்டும் (லான்ஞ் செய்தல் நிலை). இந்த மீட்டிங் என்பது ஓர் இரண்டு மணிநேர வேலையாகும். ஐந்தாவதாக, லீடர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன என்பது குறித்துக் கண்டறிந்து, அவர்களுக்கு ஒரு நிபுணரின் கைடன்ஸ் தரப்பட வேண்டும். ஆறாவதாக, லீடர்கள் தங்களுடைய செயல்பாட்டை சீனியர் லீடர்களுக்கு/மேனேஜ்மென்ட்டுக்குக் காலாண்டுக்கு ஒருமுறை தெரிவிக்கும் வகையில் மீட்டிங்குகள் நடத்தபட வேண்டும் என்கின்றனர் ஆசிரியர்கள்.